ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரயில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட இருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மாநில அரசும் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும். படுகாயமடைந்தவர்களுக்கு ரு.1 லட்சமும், சிறிய அளவில் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்பட இருக்கிறது.
மீட்புப் பணிகள் முடியும் வரை ரயில்வேக்கும் ஒடிசா மாநில அரசுக்கும் மேற்கு வங்க அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். நாங்கள் இதுவரை 40 ஆம்புலன்ஸ்களை அனுப்பியுள்ளோம். இன்று 70 ஆம்புலன்ஸ்களையும் 40 மருத்துவர்களையும் வரவைத்துள்ளோம். காயமடைந்தவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியவில்லையென்றால், அவர்களை மேற்கு வங்கத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கத் தயாராக இருக்கிறேன்.
கோரமண்டல் சிறந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒன்றாகும். நான் மூன்று முறை ரயில்வே அமைச்சராக இருந்தேன். நான் பார்த்ததிலிருந்து, 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் விபத்து இது. எனக்கு தெரிந்த வரையில் ரயிலில் மோதலை தடுக்கும் கருவி எதுவும் இல்லை. இந்த சாதனம் ரயிலில் இருந்திருந்தால், இது நடந்திருக்காது. உயிரிழந்தவர்களை மீட்க முடியாது. மீட்பு நடவடிக்கைகளின் மூலம் இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியும்.