கேரளாவில் பிரசித்த பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பொங்காலை இன்று நடந்தது. இதில் சுமார் 35 லட்சம் பெண்கள் ஒரே இடத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர்.
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் திருவிழா ஆண்டுத்தோறும் மாசி மாதம் நடக்கிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மாலையில் அம்மனுக்கு பூஜை மற்றும் மதுரையை ஆண்ட கண்ணகியின் மறு உருவமாக பாவித்து கண்ணகி சரிதமும் பாடப்பட்டு வந்தது.
இதில் முக்கிய நிகழ்ச்சியான இன்று பெண்கள் கலந்து கொண்ட பொங்கல் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவனந்தபுரம் மாவட்டத்தை சுற்றி 12 கி.மீ தூரம் சுற்றளவில் போடப்படும் பொங்காலைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னே அடுப்பு வைக்க இடம் பிடித்தனர். மேலும் பொங்காலை இடுவதற்காக வெளியூர் பெண்கள் நேற்று மாலையில் இருந்தே கோவிலை சுற்றி குவியத் தொடங்கினார்கள்.
இன்று காலை 10.20 மணிக்கு கோவில் மேல்சாந்தி பண்டார அடுப்பு(தாய் அடுப்பு)யில் நெருப்பை பற்ற வைத்து பொங்காலையை தொடங்கி வைத்தார். அதன்பிறகு அடுத்தடுத்து அடுப்புகளை பெண்கள் பத்த வைத்து பொங்காலையிட்டனர். கொஞ்ச நேரத்தில் அந்த பகுதி புகை மண்டலமாக மாறியது. இதில் கேரளா மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த சுமார் 35 லட்சம் பெண்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. பொங்காலை முடியும் தருவாயில் ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்படும். ஏற்கனவே உலக புகழ் பெற்ற இந்த பொங்காலை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது.
இந்த பொங்காலையை யொட்டி திருவனந்தபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் அங்கு உள்ளுர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே போல் பொங்காலையில் கலந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகமும் செய்துள்ளது.