இங்கிலாந்தைச் சேர்ந்த அறக்கட்டளை ஒன்று உலகளவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றிருப்பதாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல்கள், பெண்ணடிமைத்தனம், பெண்களுக்கு எதிரான கலாச்சார நடைமுறைகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இங்கிலாந்தைச் சேர்ந்த தாம்ஸன் ராய்ட்டர்ஸ் என்ற அறக்கட்டளை இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வு குறித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 548 பேரிடம் ஆய்வு எடுக்கப்பட்டது.
இந்த ஆய்வில் இந்தியாவுக்கு முதலிடம், ஆஃப்கானிஸ்தானுக்கு 2வது இடம், சிரியா 3வது இடத்திலும் உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட பெண்கள் பாதுகாப்பு குறித்த இதே ஆய்வின்போது, இந்தியா 4ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் ஆஃப்கானிஸ்தான், காங்கோ, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை பெற்றிருந்தது.
இந்நிலையில், இந்த ஆய்வை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியா பொது இடங்களில் பேசக்கூட அனுமதி இல்லாத நாடுகளைக் காட்டிலும் முன்னிலையில் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. குறைவான நபர்களை வைத்தே இந்த ஆய்வறிக்கை நடத்தப்பட்டுள்ளதால், இதுதான் ஒட்டுமொத்த இந்தியாவின் நிலை என்று கருதிவிட முடியாது என்றும் இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.