அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒருநாள் பயணமாக நேற்று புதுச்சேரிக்கு வந்திருந்தார். புதுச்சேரி சோலை நகர்ப் பகுதியில் மீனவ கிராம மக்களுடனும், பாரதிதாசன் கல்லூரியில் மாணவிகளுடனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற பின்பு AFT மைதானத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ராகுல்காந்தி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், "பல மொழிகள், பல கலாச்சாரம் என பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. ஆனாலும் ஒற்றுமையும், வலிமையையும் கொண்டுள்ளது. புதுச்சேரி சிறிதாக இருந்தாலும் மற்ற மாநிலங்களைப் போன்றே முக்கியத்துவம் பெற்றது. புதுச்சேரியின் கலாச்சாரம், பண்பாடு, உரிமைகளை காங்கிரஸ் பாதுகாக்கும். யாராவது புதுச்சேரி என்னுடைய சொத்து என நினைத்தால் அவர்கள் விரைவில் ஏமாற்றமடைவார்கள்.
கடந்த ஐந்தாண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இங்கு இருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக பிரதமர் மோடி இந்த அரசாங்கத்தைச் செயல்பட அனுமதிக்கவில்லை. புதுச்சேரி மக்களின் வாக்குகளை அவர் அவமதித்துவிட்டார். துணைநிலை ஆளுநர் மூலம் இந்த மக்களை மதிக்கமாட்டேன் என அவர் தொடர்ந்து நடந்துவந்துள்ளார். உங்களது கனவுகளைப் பிரதமர் கருத்தில் கொள்ளவில்லை.
எந்த விவாதங்களுமின்றி பாராளுமன்ற அவைகளில் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மக்கள் பிரதிநிதிகளுக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பிரதமர் என்பதைத் தாண்டி நாட்டின் சக்கரவர்த்தி என்ற நினைப்பில் உள்ளார் மோடி. இந்தமுறை வாக்களிக்கப் போகும் போது உங்களை பிரதமர் மோடி அவமதித்தை நினைவில் கொள்ளவேண்டும்.
இந்த தேர்தல் புதுச்சேரி ஆன்மாவிற்கான தர்மயுத்தம். உங்கள் உரிமைகளை மீட்பதற்கான யுத்தம். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்தவர் புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவரா? உங்கள் கலாச்சாரத்தை உணர்ந்தவரா? அவருக்கு யார் அதிகாரத்தை தந்தது? சி.பி.ஐ உட்பட அமைப்புகள் கையில் உள்ளது என்ற ஆணவமா அவருக்கு? அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரி மக்களுக்குப் பெரும் அவமானம்.
பண மதிப்பிழப்பின் போது நீங்கள் வங்கியில் போட்ட பணம், அந்த நான்கு பேருக்குத்தான் சென்றடைந்தது. ஜி.எஸ்.டி. சட்டத்தால், அந்த ஆறு பணக்காரர்களுக்குத்தான் லாபம். கரோனா சமயத்தில் மூன்று விவசாயச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளார். விவசாயச் சட்டத்தை அமல்படுத்தியதே அந்த ஆறு பணக்காரர்களுக்காகத் தான். அந்தச் சட்டத்தால் சிறு காய்கறி வியாபாரிகள் தெருவுக்குத்தான் வரவேண்டும். விவசாயிகள் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காது" என்றார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி, பாரளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி மேலிடப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.