வங்கிக்கடன்: முதியவர்கள் வீடு பறிப்பு!- பினராயி விஜயன் தலையீட்டால் மீண்டும் ஒப்படைப்பு
கேரள மாநிலத்தில் கடனைத் திரும்பச் செலுத்தத் தவறியதால், வீட்டைவிட்டு வயதான தம்பதியினர் வெளியேற்றப்பட்டனர். இந்த விவகாரத்தில் கேரள மாநில முதல்வர் நேரடியாக தலையிட்டு, அவர்களை மீண்டும் அவர்களது வீட்டில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், கேரள மாநிலம் திருப்புனித்துறா பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதியினர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், கூட்டுறவு வங்கியில் கடனாகப் பெற்ற ரூ.1.5 லட்சத்தைத் திரும்ப செலுத்தத் தவறியதால், அவர்கள் வீட்டைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, இந்த சம்பவம் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்ட முதல்வர் பினராயி விஜயன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அந்த முதியவர்கள், அவர்களது வீட்டிலேயே தங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைத்துள்ளார். வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட முதியவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணையமும் தலையிட்டுள்ளது. முதியவர்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட சம்பவத்தில், மாநில முதல்வரே தலையிட்டு சீர்செய்தது அனைத்து தரப்பினராலும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
- ச.ப.மதிவாணன்