வங்க தேசத்தைச் சேர்ந்த மைஷா மஹாஜாபின் என்ற மாணவி அசாம் மாநிலம் சில்சாரில் அமைந்துள்ள தேசிய கல்வி நிலையத்தில்(என்ஐடி) எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் மைஷா மஹாஜாபின் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான பதிவுகளுக்கு லவ் எமோஜியை பதிவிட்டுள்ளார்.
இது குறித்து முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக மாணவியின் சமூக வலைதள பதிவுகள் அனைத்துஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில்பகிரப்பட்டு வந்தது. மேலும், இது குறித்து புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து மாணவி மைஷா மஹாஜாபின் வங்கதேசத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவி நேற்று(26.8.2024) காலை இந்தியா - வங்கதேச சர்வதேச எல்லையான கரீம்கஞ்ச் மாவட்டம் சுதர்கண்டியில் உள்ள செக் போஸ்டில் விடப்பட்டார். அங்கிருந்து முழு பாதுகாப்புடன் அவரது நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய கரீம்கஞ்ச் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிமல் மஹதா, “இந்தியாவிற்குச் எதிரான பதிவுகளுக்கு மாணவி தொடர்ந்து லைவ் எமோஜியை பதிவிட்டு வந்துள்ளார். இது நாடு கடத்தல் அல்ல; வங்கதேச அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே மாணவி திருப்பி அனுப்பப்பட்டார். மாணவி தனது படிப்பை இன்னும் முழுமையாக முடிக்கவில்லை; ஆனால் அவர் திரும்ப இந்தியா வருவாரா என்பது குறித்து தற்போது ஒன்றும் சொல்லமுடியாது. அவர் தனது நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்று என்.ஐ.டி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததால், வங்க தேச அதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்றார்.