கேரளாவில் அடிக்கடி வைரஸ் பரவல் சம்பவங்கள் நிகழ்ந்து அதிர்ச்சியைத் தருவது வழக்கம். அண்மையில் கேரளாவில் துபாயிலிருந்து கண்ணூருக்கு வந்த 31 வயது இளைஞருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கேரளாவில் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலம் வயநாட்டில் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டதாக அம்மாநில அமைச்சர் சின்சுராணி தெரிவித்துள்ளார். மேலும் பன்றிகளிடம் பரவும் இந்தக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாது என்றும், கேரளாவில் உள்ள அனைத்து பன்றி பண்ணைகளையும் கண்காணிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் காரணமாக பிற மாநிலங்களிலிருந்து பன்றிகளை இறக்குமதி செய்வதற்கு கேரள அரசு தடை விதித்துள்ளது.