உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி படுதோல்வி அடைந்தது. அந்த மாநிலத்தில் இந்த கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் கணிப்புகளை மாற்றியமைத்தது. இந்த மாநிலத்தில் பாஜக கட்சி 62 தொகுதிகளை கைப்பற்றியது. மாயாவதி- அகிலேஷ் யாதவ் கூட்டணி 15 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இதனால் இரு கட்சிகளின் தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டார். அகிலேஷ் யாதவ் அறிவிப்பால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. சமாஜ்வாதி கட்சியின் அறிவிப்பை அடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் தனித்து போட்டி என்று அறிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் லக்னோவில் நேற்று நடைப்பெற்ற அகில இந்திய மாநாட்டில் தேர்தல் தோல்வி மற்றும் கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் மாயாவதி ஆலோசித்தார்.
மாநாட்டில் இறுதியாக கட்சியின் நிர்வாகிகளை கூண்டோடு மாற்றுவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அதிரடியாக அறிவித்தார். அதில் தனது சகோதரர் மற்றும் மருமகன் உள்ளிட்டோர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்கனார். இந்நிலையில் இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார் மாயாவதி. உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வலுப்படுத்தப் போவதாக மாயாவதி அதிரடியாக அறிவித்துள்ளார்.