அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விசாரணை முடிந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று காலை (10.30) மணியளவில் (09/11/2019) தீர்ப்பு வழங்கியது. அதில் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் மத்திய அரசுக்கு சொந்தம் என்றும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்றும், அதேசமயம் அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு சுமார் 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், உத்தரப்பிரதேச அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். குறிப்பாக சன்னி வஃ க்ப் வாரியம் வரவேற்றுள்ளது. மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் முகலாய அரச பரம்பரையை சேர்ந்த இளவரசர் யாகூப் ஹபிபுதீன் டுக்கி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது " அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியில் இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் சகோதரத்துவம் வலுப்பெறும் என்று கூறினார். அதேபோல் அயோத்தியில் கோயில் கட்டுவதற்காக தங்கத்தால் ஆன செங்கல் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்க உள்ளதாக தெரிவித்தார்."