அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஆந்திராவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளி ஆசிரியர்கள் 42 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் கரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறாத சூழலில், இந்தாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. முதல்நாள் மொழித்தாள் தேர்வு நடைபெற்ற நிலையில், தெலுங்கு வினாத்தாள் வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்டது தெரியவந்தது. பின்னர், அடுத்தடுத்த நாட்களில் நடந்த தேர்வுகளின் வினாத்தாளும் வாட்ஸ்அப் மூலம் கசிந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆந்திர பள்ளிக்கல்வித்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தேர்வு தொடங்கிய பிறகே சில ஆசிரியர்கள் வினாத்தாளை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்ததாகவும், தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்தது மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சியில் இத்தகைய செயலில் அவர்கள் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 42 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.