காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சில நாட்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நமது ஒன்றியத்தில் பலம் இருக்கிறது. இது கலாச்சாரத்தின் ஒன்றியம், பன்முகத்தன்மையின் ஒன்றியம், மொழிகளின் ஒன்றியம், மக்களின் ஒன்றியம், மாநிலங்களின் ஒன்றியம்.
காஷ்மீரிலிருந்து கேரளாவரை, குஜராத்திலிருந்து மேற்கு வங்கம் வரை, இந்தியா அதன் அனைத்து வண்ணங்களிலும் அழகாக இருக்கிறது. இந்தியா என்ற உணர்வை அவமதிக்க வேண்டாம்” எனப் பதிவிட்டிருந்தார். இந்தநிலையில் இந்த ட்விட் தொடர்பாக ராகுல் காந்தி மீது தேசத்துரோக சட்டத்தின் கீழ் புகாரளிக்க அசாம் பாஜக முடிவு செய்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தனது ட்விட்டில் குஜராத் முதல் மேற்குவங்கம் வரை இந்தியா உள்ளது என ராகுல் காந்தி கூறியதன் மூலம், அருணாச்சல பிரதேசம் தங்களுடையது என்ற சீனாவின் கூற்றை அவர் ஏற்றுக்கொண்டுவிட்டதாகக் கூறி, அவர் மீது ஆயிரக்கணக்கான தேசவிரோத புகார்களை அளிக்க அசாம் பாஜக திட்டமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.