இந்திய தலைநகர் டெல்லியிலும் கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. டெல்லி மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உச்ச நீதிமன்ற வளாகத்தைப் பயன்படுத்திக்கொள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
இந்தநிலையில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதித்துறை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் நூறு அறைகளை கரோனா சிகிச்சை அறைகளாக மாற்றி டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கோரிகையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டெல்லி அரசு கூறியிருந்தது.
இந்தநிலையில் டெல்லியில் நிலவும் கரோனா சூழ்நிலை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தாங்கள் அவ்வாறான எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை என கூறி டெல்லி அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தததோடு, இதுகுறித்து தானாக முன்வந்து விசாரிக்கப்போவதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து நீதிபதிகள், " இது மிகவும் தவறானது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. எந்த வித அர்த்தமுமின்றி நீங்கள் உத்தரவுகளை பிறப்பிக்கிறீகள். ஒரு நிறுவனமாக, இதுபோன்ற வசதியை உருவாக்குங்கள் என்று நாங்கள் கேட்க முடியுமா?. இது பாரபட்சமானது இல்லையா?.இது நினைத்துக்கூட பார்க்க முடியாதது. மக்கள் சாலையில் இறக்கும் போது ஒரு நிறுவனமாக நாங்கள் முன்னுரிமையை எடுத்துக்கொள்ள முடியுமா?" என டெல்லி அரசை கேள்விகளால் திளைத்தனர்.
இந்த விசாரணையின்போது துணை நீதிமன்ற நீதிபதிகள், ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டால், அவர்களுக்கு அந்த சிகிச்சைக்கான வசதியை ஏற்படுத்தி தர வேண்டுமென்பதுதான் என கூறியது குறிபிடத்தக்கது.