இந்தியாவில் சாலைகளில் ஓடும் வாகனங்களில், நான்கில் மூன்றுபங்கு வாகனங்கள் இருசக்கர வாகனங்களாக இருக்கின்றன. அதேபோல் இந்தியாவில் ஒருநாளைக்கு 30 குழந்தைகள் சாலை விபத்துகளில் இறப்பதாகவும், இறக்கும் குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகள் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் எனவும் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
இந்தநிலையில், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக வரைவு அறிவிக்கையை உருவாக்கி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், பொதுமக்களின் கருத்துகளுக்காகவும் பரிந்துரைகளுக்காகவும் வெளியிட்டுள்ளது.
அந்த வரைவு அறிவிக்கையில், 9 மாத குழந்தைகள் முதல் 4 வயது குழந்தைகள்வரை ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் உள்ள இருசக்கர வாகனங்களின் அதிகபட்ச வேகத்தை 40 கிலோமீட்டராக நிர்ணயிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே 4 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.