டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 70 சட்டசபை தொகுதிகளை கொண்ட டெல்லியில், 62 இடங்களில் ஆம் ஆத்மியும், 8 இடங்களில் பா.ஜ.கவும் கடந்த 2020ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை வெற்றி பெற்றிருந்தது. இதனிடையே, ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜ.க.வும் மோதல் போக்கு நடந்து வருகிறது.
இதனையடுத்து, தனது ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க முயற்சி செய்து வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி வந்தார். மேலும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக சில தினங்களுக்கு முன் புகார் அளித்தார்.
இந்த நிலையில், டெல்லி சட்டசபையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நேற்று (16-02-24) தெரிவித்திருந்தார். அதன்படி, டெல்லி சட்டசபையில் இன்று (17-02-24) அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதன் மீதான தீர்மானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அதனைத் தொடர்ந்து, விவாதம் நடைபெற்றது.
இதனையடுத்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 54 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் எதிர்த்து வாக்களித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ‘ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ கூட பிரிந்து செல்லவில்லை. அதில் 2 உறுப்பினர்கள் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 3 உறுப்பினர்கள் சொந்தப் பணி காரணமாக வெளியே சென்றுவிட்டனர். 2 பேர் சிறையில் உள்ளனர். ஒருவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுவிட்டார்” என்று கூறினார்.