டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு வருகை தந்தனர்.
கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி போலீஸார் வன்முறையை கலைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிஏஏ எதிர்ப்பு மற்றும் சிஏஏ ஆதரவாளர்களுக்கு இடையே நேற்று வடகிழக்கு டெல்லியில் மோதல் ஏற்பட்டு மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த கலவரத்தில் இதுவரை ஒரு காவலர் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதன் காரணமாக டெல்லியின் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு வருகை தந்தனர். அப்போது இந்த கலவரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "கடந்த இரண்டு நாட்களில் டெல்லியில் நடந்த வன்முறைகள் குறித்து முழு நாடும் கவலை கொண்டுள்ளது. உயிர்கள் மற்றும் சொத்துக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. வன்முறை அதிகரித்தால் அது அனைவரையும் பாதிக்கும். இந்த நேரத்தில் அகிம்சையைப் பின்பற்றுபவராக இருந்த காந்திக்கு எங்கள் பிரார்த்தனைகளை தெரிவிக்க நாங்கள் அனைவரும் இங்கு வந்திருக்கிறோம்" என தெரிவித்தார்.