நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து இன்று முதல் (19.9.2022) முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று புதிய நாடாளுமன்றத்தில் முதல் அமர்வு நடைபெற உள்ளது.
அதே சமயம் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மாநிலங்களவையில் ஒப்புதலையும் பெற்றிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த மசோதா நிலுவையிலேயே உள்ளது. இதையடுத்து இந்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு கொண்டு வந்து மகளிர்க்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மசோதா மீது மக்களவையில் நாளை விவாதம் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நாளை மறுநாள் இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.