என்ன தான் மது பாட்டில்களின் விலை ஏறினாலும், அதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் குடி மகன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. அவசர வேலைகளிலும் ஆண்கள் பொறுமையாக வரிசையில் நிற்க கூடிய ஒரே இடம் என்றால் அது மதுபான கடை முன்பு தான். அதுவும் பண்டிகை காலங்களில் என்றால் 2 கி.மீ தூரம் வரை வரிசையில் நிற்கும் குடிமகன்களை பார்க்கலாம். இந்த நிலையில் கேரளாவில் ஒணம் பண்டிகையையொட்டி, இந்த ஆண்டு மதுபானம் விற்பனை கடந்த ஆண்டை விட 25 கோடி அதிகரிக்கும் என கேரளா அரசு முன் கூட்டியே கணித்தது.
ஆனால் அரசின் கணக்கை உடைத்து அது 30 கோடியாக குடிமகன்கள் உயர்த்தியுள்ளனர். கேரளாவில் தனியார் மது பார்களை தவிர்த்து மொத்தமுள்ள 270 அரசு மதுபான கடைகளில் உள்நாடு மற்றும் வெளிநாடு தயாரிப்பு மதுபானங்கள் விற்கப்படுகிறது. இங்கு ஒணம், சித்திரைவிஷீ, கிறிஸ்துமஸ், புதுவருடம் போன்ற பண்டிகை நாட்களில் அதிகளவு மது விற்பனை நடக்கும். இந்த ஆண்டு ஒணம் பண்டிகையையொட்டி கடந்த 3-ம் தேதியில் இருந்து 10-ம் தேதி வரை 8 நாட்கள் 487 கோடி ருபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 கோடி அதிகமாகும். கடந்த ஆண்டு 457 கோடிக்கு தான் விற்பனையானது.
11-ம் தேதி ஒணம் பண்டிகையன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை என்பதால், முந்தைய நாள் 10-ம் தேதி மட்டும் 90.32 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதில் திருச்சூர் மாவட்டம் இரின்ஜலக்குடாவில் உள்ள ஒரு மதுகடையில் தான் அதிகமாக அன்று மட்டும் 1.22 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது என்பது குறிப்பித்தக்கது.