கோவாவில் செயலி மூலம் டாக்ஸி சேவையை விரிவுபடுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள சுற்றுலாத்தளங்களில் மிக முக்கியமானது கோவா. இந்தியா முழுவதும் மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்கின்றனர். இதனால், இங்கு டாக்ஸி சேவையும் அமோகமாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள டாக்ஸி ஓட்டுநர்களைக் குறிவைத்து, ஓலா போன்ற பெருநிறுவனங்கள் நெருங்கினாலும், தங்களது தொழில் பாதிக்கும் என்பதால் கோவா டாக்ஸி ஓட்டுநர்கள் அதைப் பெரும்பாலும் பயன்படுத்தாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், கோவா சுற்றுலா மேம்பாட்டுத் துறையின் சார்பில், டாக்ஸி சேவைக்கான அரசு செயலி கூடியவிரைவில் அறிமுகமாகவுள்ளது. கோவாவின் முக்கிய பகுதிகளுக்கு செல்ல விரும்புபவர்கள் இந்த செயலியைப் பயன்படுத்தி, டாக்ஸி சேவையை பெற்றுக்கொள்ளலாம் என கோவா சுற்றுலாத் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் அறிமுகமாக இருக்கும் இந்த சேவையில், கோவாவில் உள்ள டாக்ஸி ஓட்டுநர்கள் முன்வந்து விண்ணப்பிக்கலாம் எனவும் கோவா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.