கடல் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோதாவரி ஆறு வங்கக்கடலில் கலக்கும் இடம் ஆந்தர்வேதி என்று அழைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அந்த பகுதியில் கடல் திடீரென சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. மீனவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்தர்வேதி பகுதியில் சில நாட்களாக கடல் அலை முன்னோக்கி அதிகரித்து வந்த நிலையில், நேற்று திடீரென கடல் உள்வாங்கியது. கடல் உள்வாங்கிய பகுதிக்கு சென்று சிலர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் அந்த கடற்கரை பகுதியின் முந்தைய புகைப்படத்தையும் தற்பொழுது உள்வாங்கிய நிலையில் உள்ள புகைப்படத்தையும் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.