புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து அதிமுக மற்றும் பாமக இந்நிகழ்வில் கலந்துகொள்வதாக தனி தனியே அறிவித்துள்ளன.
தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி சவார்க்கர் பிறந்த நாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" எனப் பதிவிட்டிருந்தார். நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் சபாநாயகரின் இருக்கை அருகில் செங்கோல் ஒன்று நிறுவப்பட உள்ளது.
இந்நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திறப்பு விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன. இந்நிலையில், வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க வேண்டும் என நேரில் மக்களவை சபாநாயகர் அழைப்பு விடுத்தார். நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறக்க ஜனாதிபதியை அழைக்காததின் மூலம் அரசியல் அமைப்பு சட்டத்தை மக்களவை செயலகம் மீறிவிட்டது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 79-வது பிரிவு நாடாளுமன்றம் என்பது இரு அவை (மாநிலங்கள் அவை, மக்கள் அவை) குடியரசுத் தலைவரை உள்ளடக்கியது. குடியரசுத் தலைவரே நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர். பிரதமரையும், அமைச்சர்களையும் நியமிப்பதுடன் மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதி பெயரிலேயே எடுக்கப்படுகின்றன. அதனால் ஜனாதிபதியை வைத்து புது நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறக்க மக்களவை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நரசிம்ஹா, மகேஸ்வரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை’ எனச் சொல்லி தள்ளுபடி செய்தனர். அதேபோல், மனுதாரர் தான் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றார். இந்நிலையில், வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார்.