கர்நாடகா மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மூடா மோசடி வழக்கு என அழைக்கப்படும் இந்த வழக்கில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பது கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, மைசூர் லோக்ஆயுக்தா போலீசார், முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணையும் நடத்தி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (மூடா) தலைவர் கே மாரிகவுடா கடந்த அக்டோபர் 16ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்த நிலையில், மைசூர் லோக்ஆயுக்தா போலீசார் சம்மன் அனுப்பியதன் பேரில், இன்று முதல்வர் சித்தராமையா இன்று (06-11-24) லோக் ஆயுக்தா அலுவலகத்தில் ஆஜரானார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “லோக்ஆயுக்தா போலீசார் என்னிடம் விசாரித்தனர். அவர்களின் எல்லா கேள்விகளுக்கும் நான் பதிலளித்தேன். அவர்கள் எல்லாவற்றையும் பதிவு செய்து பின்னர் எனக்கு மீண்டும் வாசித்தனர். எல்லாம் சுமூகமாக நடந்தது. என் மீது பொய் வழக்கு போடப்பட்டது, ஆனால் நான் அவர்களிடம் உண்மையை சொன்னேன். அவர்கள் என்னை மீண்டும் ஆஜராகும்படி கேட்கவில்லை.
எனக்கு எதிராக ‘கோ பேக்’ (Go Back) கோஷங்களுடன் பாஜக ஏன் போராட்டம் நடத்துகிறது? அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானவர்களா? என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்” என்று கூறினார்.