ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று முதன் முறையாக ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார். அவருடன் 25 அமைச்சர்கள், 5 துணை முதல்வர்கள் என 30 எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். முதல்வராக பதவியேற்கும் முன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆந்திர மாநில வளர்ச்சிக்கு உதவுமாறும், தமது பதவியேற்பு விழாவிற்கு வருமாறும் ஜெகன் பிரதமரை கேட்டுக்கொண்டார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு வழங்கும் என ஜெகன்மோகன் ரெட்டிக்கு உறுதியளித்துள்ளார்.
இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வந்தார். அப்போது பிரதமருடன் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் திருப்பதியில் ஸ்வாமி தரிசனம் மேற்கொண்டார். அதன் பிறகு பிரதமருடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் ஜெகன் கோரிக்கை கடிதம் ஒன்றை வழங்கினார். இந்நிலையில் இன்று டெல்லியில் பாஜக கட்சியின் தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஸாவை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசவுள்ளார். இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி இணைவது குறித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்தும், மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டும் என முதலவர் ஜெகன் அமைச்சர் அமித்ஸாவிடம் கோரிக்கை வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பாஜக கட்சிக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத்தில் கொண்டு வரும் மசோதாக்கள் அனைத்தும் எளிதாக நிறைவேற்ற முடியும். அதே போல் மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அதிகரிக்கும். மாநிலங்களவையில் பாஜகவிற்கு மசோதாவை நிறைவேற்ற போதிய பலம் இல்லை. இதனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பாஜக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.