ஆந்திர மாநில முதல்வராக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, கடந்த 2009- ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அப்போது அவருடன் பயணம் செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்பிரமணியம் என்பவரும் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அதன் பின்னர் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி அரசியலில் களம் இறங்கினார். ஆனால் காங்கிரஸ் கட்சி அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் ஜெகன் தனிக்கட்சி தொடங்கினார். அதன் பிறகு தற்போது நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஜெகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தின் முதல்வராக முதன் முறையாக பதவியேற்றார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
![andhra pradesh cm jaganmohan reddy provide the for womens, deputy collector post](http://image.nakkheeran.in/cdn/farfuture/MMo96IIlK_SVrzbtqhjsKI9NdCzntgkfqlU7eHXShP0/1562324340/sites/default/files/inline-images/J1.jpeg)
முதல்வராக பதவியேற்ற நாள் முதல் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் முதல்வர், மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அதே போல் தினந்தோறும் காலை ஒரு மணி நேரம் மக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்தும், மனுக்களை பெற்றும் வருகிறார். இந்த நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்பிரமணியம் மகள் சிந்து வேலையின்றி தவிக்கும் தகவலை அறிந்த முதல்வர் ஜெகன், அந்த பெண்ணை அழைத்து பேசினார். இதையடுத்து அவருக்கு அரசு வேலை வழங்க ஆந்திர மாநில உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன் உத்தரவிட்டார். அதன் படி சிந்துவுக்கு துணை கலெக்டருக்கு இணையான அரசு பதவி வழங்கி ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.