ஆந்திர பிரதேசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி மாநிலத்தில் தங்கள் கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் பாஜக இறங்கியுள்ளது.
இதற்கிடையே நேற்று நடைபெற்ற பாஜகவின் பேரணியில் கலந்துகொண்டு பேசிய ஆந்திர பாஜக தலைவர் வீரராஜு, பாஜகவிற்கு ஒரு கோடி வாக்குகள் அளிக்கப்பட்டால் 70 ரூபாய்க்கு மதுபானம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு கோடி ஓட்டு போடுங்கள். அவ்வாறு அளித்தால் வெறும் 70 ரூபாய்க்கு மதுபானம் வழங்குவோம். வருமானம் மிச்சமிருந்தால், வெறும் 50 ரூபாய்க்கு மதுபானம் வழங்குவோம்" என தெரிவித்துள்ளார்.
மேலும் ஆளுங்கட்சி தலைவர்களின் ஒத்துழைப்புடன் மாநிலத்தில் தரமற்ற மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது என குற்றஞ்சாட்டியுள்ள வீரராஜு, விலை குறைவான மதுபானங்களுக்காக 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு வாக்களியுங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.