ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
கடந்த 2000-ஆம் ஆண்டு, பொழுதுபோக்கிற்காக கொண்டுவரப்பட்ட ஆன்லைன் ரம்மி விளையாட்டு, தற்போது பணத்துக்காக விளையாடும் சூதாட்டமாக பல நிறுவனங்கள் மாற்றிவிட்டன. இந்தச் சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்த மத்திய, மாநில அரசுகளிடம் சட்டம் எதுவும் இல்லை. அதனால், இந்தியாவில் எந்த உரிமத்தையும் பெறாமல், நம்முடைய சைபர் இடத்தை வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் பயன்படுத்தி, இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்துகின்றன. இந்தத் தொழிலில் பல லட்சம் கோடி ரூபாய் புழங்குகின்றன.
ஒரு விளையாட்டு என்றால், மனதை அல்லது உடலை வலிமைப்படுத்தும் விதமாக இருக்கவேண்டும். ஆனால், இந்த விளையாட்டில் அப்படி கிடையாது. பல இளைஞர்கள் இந்தச் சூதாட்ட விளையாட்டில் பணத்தை மட்டும் இழக்கவில்லை. மன ரீதியான பாதிப்பினால், தற்கொலை செய்து, தங்களது விலைமதிக்க முடியாத உயிர்களையும் இழக்கின்றனர். இதனைத்தொடர்ந்து, இந்த மாதிரியான விளையாட்டுகளை தடை செய்யவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அம்மாநில தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி வெங்கடராமையா தெரிவிக்கையில், "ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதுடன், அவர்களது வாழ்க்கையைப் பாழ்படுத்தி விடுகிறது. எனவே இளைஞர்களின் நலனைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.