ஆந்திரா மாநிலம் பாபட்லா மாவட்டம் சீனகஞ்சத்தில் இருந்து சுமார் 40 பயணிகளுடன் ஐதராபாத்திற்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சொந்த ஊருக்கு சென்று வாக்களித்துவிட்டு இந்த பேருந்தில் இருந்தவர்கள் மீண்டும் பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது இந்த பேருந்து சிலகலூரிப்பேட்டை வரிபாலம் டோங்கா என்ற இடத்தில் இருந்த டிப்பர் லாரி மீது பேருந்து மோதி விபத்தில் சிக்கியது. முதலில் லாரி தீப்பிடித்த நிலையில் பின்னர் இந்த தீ பேருந்துக்கும் பரவியது. இதில் இரு ஓட்டுநர்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர்.
மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு ஓட்டுநர்களும் மதுபோதையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக குண்டூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். சிலகலூரிபேட்டா கிராம காவல் நிலைய போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிப்பர் லாரி மீது பேருந்து மோதி தீப்பிடித்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் (13.05.2024) வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.