கார்பரேட்டுகளுக்கு வரியைக் குறைத்து, ஏழைகளுக்கு வரியை கூட்டியிருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பலமிழந்துவிட்டார் என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுதரி கிண்டலடித்தார். இதைக்கேட்ட நிர்மலா சீதாராமன் தான் இன்னும் பலத்துடன் இருப்பதாக ஆவேசப்பட்டார்.
சாமானியர்கள் மீதான வரிவிதிப்பை கடுமையாக்கி, கார்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை அளிக்கும் அளவுக்குத்தான் நிதியமைச்சரின் பலம் இருக்கிறது. இப்போது அவர் நிர்மலா இல்லை. நிர்பலா என்று காங்கிரஸ் தலைவர் சவுதரி கூறினார். நிர்பலா என்றால் பலமில்லாதவர் என்று அர்த்தம்.
இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். சவுதரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்கள். ஆனால், தனது வார்த்தைகள் தவறு என்றால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக்கொள்ளுங்கள் என்றும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறினார். நிர்மலா சுதந்திரமாக செயல்படவில்லை என்று சவுதரி அழுத்தமாக கூறினார்.
இதையடுத்து பேசிய நிர்மலா, தான் மட்டுமில்லை, இந்தியாவில் பெண்கள் அனைவரும் சப்லாதான் என்று நிர்மலா கூறினார். சப்லா என்றால் பலமிக்கவர்கள், அதிகாரமிக்கவர்கள் என்று அர்த்தம்.