Skip to main content

“தலைகீழாக தொங்க விடுவோம்” - காங்கிரஸை விமர்சித்த அமித்ஷா!

Published on 12/11/2024 | Edited on 12/11/2024
Amit Shah criticized the Congress at jharkand

ஜார்க்கண்ட் மாநிலத்தில், நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்டில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளது. அதே போல், பா.ஜ.க, ஏ.ஜே.எஸ்.யூ, ஐக்கிய ஜனதா தளம், எல்.ஜே.பி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் களமிறங்குகிறது. 

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக் கட்சிகளும், புதியதாக ஆட்சி அமைக்க பா.ஜ.க கூட்டணி கட்சிகளும் தீவிர முனைப்பில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களில் அனல் பறந்து வருகிறது. அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். 

ஜார்க்கண்ட் மாநிலம், ஜாரியாவில் பா.ஜ.க கூட்டணி கட்சி சார்பாக தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “இங்கு காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) ஆகிய கட்சித் தலைவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பணம் அனைத்தும் ஜாரியா மற்றும் தன்பாத்தின் இளைஞர்கள் மற்றும் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு சொந்தமானது. இங்கு பா.ஜ.க அரசு அமைந்தவுடன், இந்த கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்தவர்களை தூக்கிலிட்டு தலைகீழாக தொங்கவிடுவோம். ஜார்க்கண்டின் ஏழை பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இளைஞர்களிடம் இருந்து கொள்ளையடித்த பணம், அனைத்தும் மீட்கப்பட்டு ஜார்க்கண்ட் கருவூலத்தில் டெபாசிட் செய்யப்படும்.

ராகுல் காந்தி பல அறிவிப்புகளை வெளியிட்டாலும் அவை நிறைவேற்றப்படவில்லை. இப்போது நீங்களும் இல்லை என்று சொல்கிறீர்கள், ராகுல் காந்தியின் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் எதுவும் நிறைவேறப் போவதில்லை என்று கூறுகிறார். ஆனால் மோடியின் உத்தரவாதம் கல்லில் எழுதப்பட்டுள்ளது. நாங்கள் ஒவ்வொரு உத்தரவாதத்தையும் நிறைவேற்றுவோம். வரும் 20ம் தேதி அனைவரும் வாக்களிக்க வேண்டும். உங்கள் ஒவ்வொரு வாக்கும் ஜார்க்கண்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். கோடீஸ்வரனாகும் ஜேஎம்எம் வேண்டுமா அல்லது ஏழை தாய்மார்களை லட்சாபதி  ஆக்கும் நரேந்திர மோடியின் அரசு வேண்டுமா என்பதை உங்கள் ஒரு வாக்கு தீர்மானிக்கும்” என்று பேசினார். 

சார்ந்த செய்திகள்