இந்திய அரசியல் சாசன நாளான இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ''பல பிரச்சனைகள் ஏற்பட்டபோதும் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அரசியலமைப்பு உதவியது. தற்போது நேரடி காலனி ஆதிக்கம் இல்லாவிடில் காலனித்துவ மனநிலை முடியவில்லை. வளரும் நாடுகளின் வளர்ச்சி பயணத்தில் ஏற்படும் தடைகளே இதற்கான உதாரணம்'' என பேசினார்.
முன்னதாக இன்று நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அரசியல் சாசன விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடக்கிவைக்க, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாரதிய ஜனதா எம்.பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி அரசியலமைப்பு தின விழா அண்ணல் அம்பேத்கருக்கும் நாடாளுமன்றத்திற்கு மரியாதை செலுத்தக் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்து அண்ணல் அம்பேத்கருக்கும் நாடாளுமன்றத்திற்கும் அவமரியாதை ஏற்படுத்திவிட்டனர். ஜனநாயகத்தைக் காப்பதற்காகத்தான் அரசியலமைப்பு இருக்கிறது. ஆனால் அரசியல் கட்சிகளுக்குள் ஜனநாயகம் இல்லை. பல கட்சிகளில் அரசியல் கட்சிகளில் குடும்ப அரசியல் நிலவுவது ஜனநாயகத்திற்கு ஆபத்து'' என்று பேசினார்.