உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ), வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாகவும், திறம்படவும் செய்து முடிக்கிறது. அமெரிக்காவில் இருந்து உருவாக்கப்பட்ட ‘சாட் ஜிபிடி’க்கு போட்டியாக தற்போது இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தளத்தை பிரபல தொழிலதிபரின் ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவை சேர்ந்த ‘ஓபன் ஏ.ஐ’ என்ற நிறுவனம் ‘சாட் ஜிபிடி’ என்ற செயற்கை நுண்ணறிவு, பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயற்கை நுண்ணறிவு வரவால், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மனிதர்கள் தொழில்நுட்பத்தில் செய்யக்கூடிய வேலைகளை, செயற்கை நுண்ணறிவின் மூலம் மிகவும் எளிதாக செய்ய முடியும். மேலும், இது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதும் திறன் படைத்தது என்பதுடன் மனிதனை போன்று கணினி குறியீடுகளையும் இதனால் எழுத முடியும். இதனையடுத்து, பல வகையான செயற்கை தொழில்நுட்பங்கள் இணையத்தில் பயன்பாட்டில் இருந்ததால் கூகுள் நிறுவனம் சரிவைக் கண்டது.
இதனையடுத்து, ‘சாட் ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் ‘பார்ட்’ என்ற செயற்கை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், ‘பார்ட்’ தொழில்நுட்பம் பெரிய வரவேற்பினைப் பெறவில்லை என்றே கூறப்படுகிறது. அதனால், அனைத்து தொழில்நுட்பங்களையும் மிஞ்சும் வகையில், ‘ஜெமினி’ என்ற செயற்கை நுண்ணறிவை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி ‘சாட் ஜிபிடி’க்கு போட்டியாக அமைந்தது. இந்த செயற்கை நுண்ணறிவின் மூலம் தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், பலரும் தங்களின் பணியை இழக்கும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘சாட் ஜி.பி.டி மற்றும் கூகுளின் ஜெமினி போன்றவற்றுடன் போட்டியாக பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் இந்தியாவின் சிறந்த பொறியியல் பள்ளிகளால் ஆதரிக்கப்படும் ‘பாரத் ஜி.பி.டி’ ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் ‘ஹனூமான்’ என்ற செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தவுள்ளது. 11 இந்திய மொழிகளில் செயல்படும் இந்த ‘ஏ.ஐ’ மாடல் வருகிற மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.