இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதில், “கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகளால் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து நடப்பு கூட்டத் தொடரிலேயே வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி (05.02.2024) குடியரசுத் தலைவர் உரைக்கு மக்களவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நேற்று (07-02-24) மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசினார்.
இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (08.02.2024) கருப்பு அறிக்கையை வெளியிட்டார். அதில், “காங்கிரஸ் தலைமையிலான 2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன் ஒப்பிட்டு தற்போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்துள்ளதாகவும், இதனால் கடந்த 10 ஆண்டு காலத்தில் பல்வேறு பின்னடைவு ஏற்பட்டுள்ளன” எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.