அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமேசான் நிறுவனம், உலக அளவிலான இணையத்தள வணிக சந்தையைக் கணிசமான அளவில் தன் கையில் வைத்துள்ளது. இந்தியாவிலும் இந்நிறுவனத்திற்கு அதிகப்படியான வாடிக்கையாளர்கள் உள்ளனர். புதிய வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் இழுக்கும் விதமாகவும், பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கும் விதமாகவும் அமேசான் தொடர்ந்து பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் அமேசான் இந்தியாவில் வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கோடு புதிய முயற்சி ஒன்றைக் கையில் எடுத்துள்ளது.
அதன்படி, இனி அமேசான் தளங்களை தென்னிந்திய மக்கள் பிராந்திய மொழிகளிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன்பு, இந்தியாவில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே அமேசான் தளங்களின் சேவை வசதிகள் கிடைத்தன. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய கூடுதல் பிராந்திய மொழிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அமேசான் நிறுவனத்தின் இந்த முயற்சியானது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதுகுறித்து அமேசான் நிறுவனத்தின் வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் சந்தைப்படுத்துதல் துறையின் இயக்குனர் கிஷோர் தோட்டா கூறுகையில், "இணையத்தள வர்த்தகத்தை நோக்கி பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை ஈர்க்க இருக்கிறோம். பிராந்திய மொழிகள் அறிமுகப்படுத்தியது, அவர்களுக்கான வசதியை எளிமைப்படுத்தலுக்கான முன்னெடுப்பு" எனக் கூறினார்.