இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துக்கும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் உ.பி உள்ளிட்ட சில மாநிலங்களில் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டாத சூழல் நிலவிவருகிறது. சில தினங்களுக்கு முன்பு அம்மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தச் சென்ற அதிகாரிகளைப் பார்த்து பயந்து, சரயு ஆற்றில் சிலர் குதித்துத் தப்பிச் சென்றனர். இதனால் பொதுமக்களின் அறியாமையைப் போக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள எடவாக் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனையடுத்து, அங்கு உள்ள மதுக்கடைகள் அனைத்திலும், "தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இல்லையென்றால் மதுபானம் கிடையாது" என அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பைரோஸ்பாத் மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு இந்த மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.