‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை முதலில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடத்துங்கள் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பரிந்துரை செய்துள்ளார்.
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற கூற்றைப் பல வருடங்களாகவே ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் தேர்தல் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்பதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலைலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை முதலில் உத்தரபிரதேசத்தில் பரிசோதனை செய்து பாருங்கள் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், "ஒவ்வொரு பெரிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக ஒரு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது; அது போல 'ஒரே நாடு - ஒரே தேர்தல்' செயல்படுத்துவதற்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்; இது தேர்தல் ஆணையத்தின் திறனையும், பொதுமக்களின் கருத்தையும் வெளிக்காட்டுவதோடு, பா.ஜ.க. மீது மக்கள் எவ்வளவு கோபமாக இருக்கிறார்கள் என்பதும், அவர்களை ஆட்சியிலிருந்து அகற்ற மக்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதும் பா.ஜ.க.வுக்கு தெரியவரும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.