சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. அதோடு, 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பாமகவின் மகளிர் அணி சார்பில் சௌமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (02.01.2025) போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்திருந்தது. இருப்பினும் இந்த தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சௌமியா அன்புமணி மற்றும் பாமகவினர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனிடையே இந்த போராட்டம் நடத்த அனுமதி கோரி பாமக வழக்கறிஞர் பாலு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி போராட்டம் நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள சமுதாயம் நலக் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சௌமியா அன்புமணி விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக பெண்களுக்கும் நிகழும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மிகப்பெரிய ஒரு போராட்டத்தை இன்று நடத்தியுள்ளோம். ஏம் ஐ நெக்ஸ்ட் (am i next) என்ற தலைப்பில் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நிறையப் பெண்கள், குழந்தைகள் மகளிர் எனப் பலரும் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
இப்படி இருக்கும் சூழலில் அடுத்தது நீயா?. அடுத்தது நானா? என்று கேள்வியுடன் பெண்கள் முன்வந்து இந்த போராட்டத்தை நடத்தி உள்ளோம். இந்த போராட்டத்தைக் காலையில் இருந்து தொடர்ந்து நடத்தினோம். திருவண்ணாமலையில் உழவர் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் 100 முதல் 200 காவல் துறையினர் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைக்கு இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது எனக் கேள்விப்பட்டவுடன் 350 முதல் 400 காவலர்கள் பாதுகாப்புக்குப் போடப்பட்டுள்ளனர். பெண்களுக்குக் குரல் கொடுக்க வந்தோம். இந்த குரல் தமிழக அரசின் காதை எட்ட வேண்டும் என்பதற்காகத்தான் 2 ஆயிரம் மகளிர் கூடியிருந்தோம். இந்த போராட்டத்திற்கு வந்தவர்கள் உடனடியாக கைது செய்து 2,3 மண்டபங்களில் தனித் தனியாகப் பிரித்து அடைக்கப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.
படங்கள் : எஸ்.பி. சுந்தர்