குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி நக்கீரன் 360 சேனலில் தொடர்ச்சியாக பேசி வருகிறார் குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ். அந்த வகையில் தான் சந்தித்த வழக்கு பற்றி இன்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
கணவர் இறந்தபிறகு கல்லூரி படிக்கும் வயதில் இருக்கும் ஒரு மகனை வைத்துக்கொண்டு பெண் ஒருவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். பின்பு அந்த பெண் கணவருடன் சேர்ந்து மற்றொரு குழந்தையைப் பெற்றுள்ளார். மூத்த மகனை கல்லூரிக்கு அனுப்பிவிட்டு இரண்டாவது கணவர் மற்றும் அவருக்குப் பிறந்த குழந்தையுடன் அந்த அம்மா சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே கல்லூரியில் படிக்கும் மகன் சிகரெட், மது, ட்ரக்ஸ் என அனைத்துவிதமான உடலுக்குத் தீங்கு தரும் விஷயங்களை செய்துள்ளார்.
மகன் செய்த காரியங்கள் அனைத்தும் அந்த அம்மாவுக்குத் தெரிய வர மகனை என்னிடம் கவுன்சிலிங் அழைத்து வந்தார். அந்த பையனிடம் பேசும்போது, அப்பா மற்றும் அம்மாவின் பாசம் கிடைக்கவில்லை தனியாகக் கஷ்டப்படுகிறேன். அப்பா எதற்கெடுத்தாலும் திட்டுகிறார். வீட்டில் நிம்மதி இல்லை எனக் கூறினார். அதோடு தான் கல்லூரியில் ஒரு பெண்ணுடன் ரிலேஷன்சிப்பில் இருந்து அது அந்த பெண்ணின் பெற்றோருக்குத் தெரிந்து சண்டையானதையும் கூறினார். ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாய்? என்று கேட்டதற்கு அப்பாவுடன் பழக நினைத்தால் அவரும் விலகிச் சென்று திட்டுகிறார். அம்மாவும் கண்டுகொள்வதில்லை. காதலிலும் பிரச்சனை உள்ளது என்று வேதனையுடன் கூறினார்.
பின்பு அந்த பையனுக்கு, தொடர்ந்து கவுன்சிலிங் கொடுத்ததன் மூலம் இப்போது சிகரெட், மதுப் பழக்கத்தை விட்டுள்ளார். இருந்தாலும் தான் ட்ரக்ஸ் எடுத்துக்கொள்வதை விடமாட்டேன் அதில்தான் நிம்மதி கிடைக்கிறது என்று என்னிடம் கூறினார். இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் மோசமாகிவிடும் மருத்துவர் பரிந்துரைப்படி இது போன்ற தீங்கு தரக்கூடிய பழக்க வழக்கங்களை விடுவதற்குப் பையன் முயற்சி செய்தாலும் முடியாது. ஏனென்றால் பையன் அன்புக்குத்தான் ஏங்குகிறான் என்று பையனின் அம்மாவிடம் கூறி அப்பாவையும் அன்பாக இருக்கச் சொல்லுங்கள் என்றேன். அந்த பையனின் அப்பாவிடம், உங்களை உங்களுடைய பையன் அப்பாவாக ஏற்றுக்கொண்டுவிட்டார். உங்களது மகனுடன் சேர்ந்த்து அனைவரும் ஒரே குடும்பம்தான். எனவே பிரித்துப் பார்க்காமல் அன்பு செலுத்துங்கள் என்று ஆலோசனை கூறி அனுப்பி வைத்துள்ளேன். இப்போது ஓரளவிற்கு அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கிறது. அந்த பையன் மட்டும் தனக்கிருந்த தீய பழக்கவழக்கங்களை விட தொடர்ந்து கவுன்சிலிங் என்னிடம் கவுன்சிலிங் பெற்று வருகிறார்.