கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்தின் கிழக்கு பகுதி மண்டல இயக்குநரான ரோஹித் பாஷின் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு சென்றார்.
அப்போது அங்கு உள்ள 'டூட்டி ஃப்ரி' கடையில் அவர் பர்ஸ் ஒன்றை திருடியுள்ளார். அப்போது அங்கிருந்த நிர்வாகி அவரை கையும் களவுமாக பிடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் திருடியது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இது ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பெரும் அவமானமாக அமைந்தது. மேலும் இதுதொடர்பாக ஆஸ்திரேலிய போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து ரோஹித் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் அவரிடம் தொடர் விசாரணையும் நடைபெற்றது. ஏர் இந்தியா நிர்வாகம் நடத்திய இந்த விசாரணையில் ரோஹித் திருடியது உறுதியானது. இதையடுத்து அவர் மீதான பணியிடை நீக்க உத்தரவை வாபஸ் பெற்று, அதற்கு பதிலாக, வரும் 31 ஆம் தேதியுடன் அவரை கட்டாய ஓய்வில் பணியில் இருந்து அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய ஓய்வில் அனுப்பப்படுவதால் ரோஹித்துக்கு ஓய்வுக்கு பிந்தைய எந்த பணப் பயன்களும் கிடைக்காது. வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக் கொடை தொகை மட்டுமே அவர் பெற இயலும். இதைத்தவிர விடுமுறை நாட்களுக்காக தொகை உள்ளிட்ட சலுகைகள் அனைத்தும் அவருக்கு கிடைக்காமல் நிறுத்தி வைக்கப்படும் என ஏர் இந்தியா நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது.