நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் பாண்டிச்சேரியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்வேந்தன் ஆதரவுகேட்டு திறந்தவெளி வேனில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''அனைவருக்கும் வணக்கம். எனக்கு 34 வயசு தான். 34 வயதில் உங்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு எம்.பி சீட் கிடைக்குமா? எந்த அடிப்படையில் கொடுத்தார்கள் என்று நினைக்கிறீர்கள். எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்தார் என்றால், கூப்பிட்டு கேட்டார் 'சின்ன பிள்ளைக்கு சீட்டு வாங்கி தரீங்களே ஜெயிச்சிடுவீங்களா' எனக் கேட்டார். ஒரே வார்த்தை தான் சொன்னோம் 'கவலைப்படாதீங்க சின்னப் பிள்ளையாக இருந்தாலும் பாண்டிச்சேரியில் தாய்மார்கள் அந்த பிள்ளையை கைவிட மாட்டார்கள்' என்று சொன்னோம்.
சத்தியமாகச் சொல்கிறேன் தாய்மார்கள் தான் நம் நாட்டின் கண்கள். உங்களை நம்பித்தான் நாங்கள் நிற்கிறோம். இந்த ஒரே ஒரு முறை கார்ப்ரேட் பிஜேபிக்கும், கார்ப்ரேட் காங்கிரசுக்கும் ஓட்டுப் போடாமல், சாதாரண ஒரு ஏழை, உங்கள் வலியை புரிந்த எனக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட்டு ஜெயிக்க வைங்க. சத்தியமாக சொல்கிறேன் சாகுற வரை நான் உங்களுக்கு உண்மையாக இருப்பேன்'' என்றார்.