புதுச்சேரி மாநிலத்தில் அனைத்துத் துறைகளிலும் காலியாக உள்ள மேல்நிலை எழுத்தர் பணியிடங்களை நிரப்ப, அரசு அறிவிப்புகளை வெளியிட்டது. அறிவிப்பினைத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மேல்நிலை எழுத்தர் பணிக்காக விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் பணிபுரியும் அமைச்சக ஊழியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளநிலை எழுத்தாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்கி மேல்நிலை எழுத்தர் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த இரண்டு தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தலைமைச் செயலகம் முன்பு ஒன்று திரண்ட அமைச்சக ஊழியர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். ஊழியர்களின் இந்தப் போராட்டத்தில் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் நேரு மற்றும் பிரகாஷ்குமார் ஆகியோர் ஊழியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதனையடுத்து அவர்கள் இது சம்பந்தமாக முதலமைச்சரிடம் பேசி விரைவில் முடிவு காணப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் நேரு கூறுகையில், "புதுச்சேரியில் புதிய ஆட்கள் மூலம் மேல்நிலை எழுத்தர் பணியை அரசு நிரப்பிட அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் இளநிலை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கி, அதன் மூலம் மேல்நிலை எழுத்தர் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்று ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். இது சம்பந்தமாக முதல்வரிடம் பேசி விரைவில் முடிவு காணப்படும்" என்றார்.