புதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்க உரிமைக் கோராததால், புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த அம்மாநில துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜன் அனுப்பிய பரிந்துரையை ஏற்று, ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, கோப்புகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைக்க ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, நேற்று (25/02/2021) இரவு மத்திய உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி உடனடியாக அமலுக்கு வந்தது.
இந்த நிலையில் புதுச்சேரியில், உடனடியாக பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 2% குறைக்க, அம்மாநில துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசைக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழக பிரிவின் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். சந்திரமௌலி மற்றும் ஏ.பி.மகேஸ்வரி ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.