4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.
அந்த வகையில், டெல்லி மைதானத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் மோதின. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 272 ரன்களை எடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹஸ்மத்துல்லா 80 ரன்களையும், அஸ்மத்துல்லா 62 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணிக்கு 273 ரன்களை இலக்காக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்தது. இந்திய அணியில் பும்ரா 4 விக்கெட்களையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்களையும், ஷர்துல், குல்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களையும் எடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து 273 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்களை விளாசினார். 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை இந்திய அணி குவித்தது. இதன் மூலம் உலகக் கோப்பை லீக் தொடரில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி உலகக் கோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். இந்த போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச அளவில் 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும் உலகக் கோப்பை தொடரில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோஹித் ஷர்மா. இதன் மூலம் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் பட்டியலில் இருந்த சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்து தற்போது ரோகித் சர்மா முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.