இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற பெயரில் தமிழில் ஒரு சினிமா வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், உண்மையிலேயே இரண்டாம் உலகப்போரின் குண்டு ஒன்று தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. பேராபத்தை ஏற்படுத்தும் முன்பு அக்குண்டை செயலிழக்கச்செய்துவிட்டனர்.
இத்தாலியின் தெற்கு பகுதியில் அபுலியா பிராந்தியத்தில் உள்ள துறைமுக நகரமான பிரிந்தியில், ஒரு தியேட்டரை சீரமைக்கும் பணிகள் நடந்து வந்தது. அப்போது கட்டுமான பணிக்காக குழி தோண்டியபோது வெடிக்காத வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்ததில் அக்குண்டு இரண்டாம் உலகப்போரின் போது 1941-ம் ஆண்டு இத்தாலி மீது இங்கிலாந்து வீசிய வெடிகுண்டு என தெரியவந்தது.
ஒரு மீட்டர் நீளமும், 200 கிலோ எடையையும் கொண்ட அந்த வெடிகுண்டை பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு ரிமோட் மூலம் செயலிழக்க செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனால் இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து 1,617 மீட்டர் சுற்றளவு பகுதியில் வசிக்கும் சுமார் 54 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர். பிரிந்தி நகரில் உள்ள உள்ளூர் விமான நிலையம், ரெயில் நிலையம், 2 மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலை ஆகியவை பாதுகாப்பு கருதி மூடப்பட்டன. மூத்த ராணுவ அதிகாரிகளின் கண்காணிப்பில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் திட்டமிட்டப்படி ரிமோட் மூலம் அந்த வெடிகுண்டை வெற்றிகரமாக செயலிழக்க செய்தனர்.