கடந்த அக்டோபர் மாதம் ராகுல் காந்தி, நாட்டுப்பற்றுக்கான அடையாளம் என பா.ஜ.க. வீர சவார்க்கரை வழிபடுகிறது. நாடாளுமன்றத்தில் அவரது உருவ படத்தினை பிரதமர் மோடி வைத்துள்ளார் என்று பேசியிருந்தார். மேலும், இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிறையில் இருந்தனர். வீர சச்வார்க்கர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரி, ஆங்கிலேயர்களுக்கு கடிதம் எழுதினார். அவர் வீரர் இல்லை என்றும் கூறினார்.
வீர சவார்க்கர்தான் இந்துத்துவாவை பிரபலப்படுத்தியவர் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், சவார்க்கரின் பேரன் ரஞ்சீத் சவார்க்கர், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் அவதூறு பேச்சுக்கு எதிராக சிவாஜி பூங்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
”ஆங்கிலேயர்களால் 27 வருடங்கள் சிறை வைக்கப்பட்டவர் சவார்க்கர். தேர்தல் பேரணியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, சிறையில் இருந்து விடுதலை செய்யும்படி ஆங்கிலேயர்களிடம் சவார்க்கர் மன்னிப்பு கோரியதாக பேசியுள்ளார். இது முற்றிலும் தவறான ஒன்று. வீர சவார்க்கர் ஜீயை அவதூறு செய்ததற்காக ராகுல் காந்தி மீது புகார் அளித்துள்ளேன்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.