உத்தரப் பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இதன் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அயோத்தியில் கோவிலைக் கட்ட அவரது சீடரான மோடியை ராமரே தேர்வு செய்துள்ளார் என அத்வானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு ஹிந்தி பத்திரிகையில் பேசியுள்ள அவர், “33 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடத்திய ராம் ரத யாத்திரை என்னுடைய அரசியல் பயணத்தில் மிக முக்கியமானது. மேலும் தனது அரசில் பயணத்தையே மாற்றியமைத்தது. 1990 செப்டம்பர் 25 அன்று காலை நாங்கள் யாத்திரையைத் தொடங்கியபோது, ராமர் மீதான நம்பிக்கை நாட்டில் ஒரு இயக்கமாக உருவெடுக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. ரத யாத்திரை வெளியே எடுக்கப்பட்டபோது, அப்போது என்னுடைய உதவியாளராக இருந்த மோடி மிகவும் பிரபலம் இல்லை. ஆனால் அப்போதே அயோத்தியில் கோவிலைக் கட்ட அவரது சீடரான மோடியை ராமர் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
குடமுழுக்கு விழாவில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்யும்போது, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்துவார். இந்த கோயில் அனைத்து இந்தியர்களையும் ராமரின் பண்புகளை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கும். ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் ராமர் மயமாகி இருக்கிறது” என்றார்.