காங்கிரஸ் கட்சி மீது விமர்சனம் இருப்பவர்கள் வேறு கட்சியில் சேர்ந்துகொள்ளுங்கள் அல்லது தனிக்கட்சி தொடங்கிக்கொள்ளுங்கள் என அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நிலை குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், "காங்கிரஸ் கட்சியில் உள்ள அனுபவமான தலைவர்கள், அனுபவமான மனநிலை உள்ளவர்கள், அரசியல் களச்சூழலை அறிந்தவர்கள் கட்சியை மீள் உருவாக்கம் செய்ய வேண்டும். நாம் சரிந்து கொண்டுள்ளோம் என்பதைக் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் பல நிலைகளில் பல விஷயங்களைச் செய்ய வேண்டும். குறிப்பாக, கட்சி சார்ந்த விஷயங்கள், ஊடகங்களில் உரையாடுவது, மக்கள் யார் பேச்சைக் கேட்க விரும்புகிறார்களோ அவர்களை நிறுத்துவது, சுறுசுறுப்பான, சிந்தனைமிக்க தலைமைத்துவத்தை வழங்குதல் போன்றவை அவசியம்" எனத் தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்குக் காங்கிரஸ் கட்சியினுள் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சி மீது விமர்சனத்தை முன்வைக்கும் காங்கிரஸ் கட்சியினருக்குப் பதிலளித்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "கபில் சிபல் இதுபோன்ற கருத்தை பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிடுவதற்கு பதிலாகக் கட்சி கூட்டத்தில் தெரிவித்து இருக்கலாம். பீகார் தேர்தலிலோ அல்லது கடந்த ஆண்டு நடந்த மற்ற மாநில தேர்தல்களிலோ கபில் சிபல் காங்கிரசுக்காக பிரசாரம் செய்யவில்லை. ஏ.சி. அறையிலிருந்து பேசுவதைத் தவிர்த்து விட்டு அவர் களத்தில் இறங்கி பணி செய்ய வேண்டும். கட்சியின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்தவர்கள், தங்களுக்கு காங்கிரஸில் சரியான இடம் இல்லை என்று கருதினால் கட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கு பதில் வேறு கட்சியில் சேர்ந்து கொள்ளவோ அல்லது தனியாகக் கட்சி ஆரம்பிக்கவோ சுதந்திரம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.