கர்நாடகா மாநிலம், பெங்களூர் மாகடி சாலையில் ஜி.டி. வேர்ல்ட் என்ற தனியார் வணிக வளாகத்தில் கடந்த 16ஆம் தேதி பகீரப்பா என்ற விவசாயி தனது மகன் நாகராஜுடன், அங்குள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் படம் பார்க்க வந்துள்ளார்.
ஆனால், பகீரப்பா வேட்டி அணிந்து வந்திருந்ததால், அவரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும், வேட்டி அணிந்து வந்ததால் விவசாயிக்கு அனுமதி அளிக்காத வணிக வளாகத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, கன்னட அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர், நேற்று அந்த தனியார் வணிக வளாகம் முன்பு போராட்டம் நடத்தினர். விவசாயியை வணிக வளாகத்திற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதற்காக வணிக நிர்வாகம், விவசாயி பகீரப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் கர்நாடகா மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியது. அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரம் சட்டமன்றம் வரையிலும் சென்றது.
இந்த நிலையில், வேட்டி அணிந்து வந்த விவசாயியை உள்ளே விட அனுமதி மறுத்த வணிக வளாகத்திற்கு எதிராக அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அந்த வணிக வளாகத்தை ஒரு வாரத்திற்கு மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அந்த வளாகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.