ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 உதவித்தொகை உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்துவிட்டு சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.அக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்கவைத்துகொள்ள பா.ஜ.க.வும், பறிபோன ஆட்சியை திரும்ப பெரும் நோக்கத்தில் காங்கிரஸும் மத்திய பிரதேச மாநிலத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக களம் இறங்கியுள்ளது.
அதன் அடிப்படையில், மத்திய பிரதேசத்தின் சத்னா நகரில் நடந்த பேரணி ஒன்றில் ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ மத்திய பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் மாநிலம் முழுவதும் இலவச கல்வியை வழங்க தரமான பள்ளிகளை உருவாக்குவோம். மருத்துவமனைகளில் ரூ.20 லட்சம் செலவில் பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகளுடன் இலவச சிகிச்சையும் அளிக்கப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும். 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 24 மணி நேரமும் தடையில்லாத மின்விநியோகம் மற்றும் நவம்பர் 30ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள மின்கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.
சில கட்சிகள் தேர்தலின் போது அரசியல் தலைவர்கள் பல வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பின்பு அதை மறந்து விடுகிறார்கள். ஆம் ஆத்மி அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றும். அதை டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களை பார்த்தால் உங்களுக்கு புரியும்” என்று தெரிவித்தார்.