டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.
இந்த சூழலில் கடந்த 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஐந்தாவது முறையாக சம்மன் அனுப்பியது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்தார். 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. இந்த மனு மீதான விசாரணையை வரும் இன்று (07-02-24) நடத்தவுள்ளதாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது.
இதற்கிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமார் மற்றும் ஆம் ஆத்மி நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை நேற்று (06-02-24) சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை நடத்திய சோதனை குறித்து ஆம் ஆத்மி எம்.பி அதிஷி இன்று (07-02-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அரவிந்த் கெஜ்ரிவாலை முடிக்க பா.ஜ.க.வும், மோடியும் விரும்புகிறார்கள். இப்போது எந்த ஒரு வழக்கிலும் முன்னறிவிப்பு இன்றி சோதனை நடக்கின்றன என்று தெளிவுபடுத்தியுள்ளனர். இது முதன்மை விசாரணையா? அல்லது நிறுவனமா?. இன்று அமலாக்கத்துறை, பா.ஜ.க.வின் அரசியல் எதிரிகளை முடிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
16 மணி நேர சோதனைக்குப் பிறகு, முதல்வரின் தனிப்பட்ட செயலாளரின் இரண்டு ஜிமெயில் கணக்கு பதிவிறக்கங்களை அமலாக்கத்துறை எடுத்திருக்கிறது. பின்னர், முதல்வரின் தனிச் செயலர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்த 3 மொபைல் போன்களை எடுத்துச் சென்றுள்ளனர். தனக்கு எதிராகக் குரல் எழுப்பக்கூடிய ஒரு தலைவர் இருந்தால் அது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே என்பது பிரதமர் மோடிக்குத் தெரியும்” என்று கூறினார்.