ஆதார் எண்ணுடன் இணைக்காத சிம்கார்டுகள் பிப்.2018 முதல் செயலிழப்பு - மத்திய அரசு
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் ஆதாரை இணைக்காத சிம்கார்டுகள் செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில், உச்சநீதிமன்றம் ஆதாரை சிம்கார்டுடன் இணைப்பது குறித்து தீர்ப்பு வழங்கியது. அதில் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் பொதுமக்கள் அனைவரும், தங்கள் சிம்கார்டுகளுடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டது. தீவிரவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் சிம்கார்டுகளை பயன்படுத்த முடியாத வண்ணம் செய்வதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களின் பயோமெட்ரிக் உட்பட எந்தவொரு தகவலும் சிம்கார்டு நிறுவனங்களால் சேமித்து வைக்கப்பட மாட்டாது மற்றும் அப்படி செய்வது சட்டவிரோதமானது. எனவே, இந்த ஆதார் விவரங்கள் என்கிரிப் எனப்படும் எளிதில் அணுக முடியாத தகவல்களாக மாற்றப்பட்டு, மத்திய அரசின் தனிமனித அடையாளத்திற்கான ஆணையத்திடம் சிம்கார்டு நிறுவனங்களால் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, வங்கிக்கணக்கு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, எரிவாயு என பல விஷயங்களில் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது செல்போன் எண்களையும் ஆதாருடன் இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
- ச.ப.மதிவாணன்