தொழில்நுட்பம் ஆபத்தான பாதையை நோக்கி திரும்பி இருப்பதால் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்க வேண்டி உத்தரவிட வேண்டும் என்ற வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் தீபக், அனிருத்தா போஸ் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவது, இணையதளத்தை பயன்படுத்தி நிகழ்த்தப்படும் குற்றங்களை கண்டு பிடிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். இது அறிவியல் பூர்வமான விவகாரம் எனவே உச்ச நீதிமன்றமோ, உயர்நீதிமன்றமோ இது குறித்து முடிவு செய்வது உரிய ஒன்றாக இருக்காது என கருத்து தெரிவித்த நீதிபதிகள்.
இணையதள குற்றங்களை நிகழ்த்துபவர்களை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை என்று கூறி விலகிவிட முடியாது. அதேபோல் ஒன்றை செய்வதற்கு தொழில்நுட்பம் உள்ள பொழுது அதை தடுப்பதற்கும் நிச்சயம் தொழில்நுட்பம் இருக்கவேண்டும் என சுட்டிக்காட்டினர்.
ஆபத்தான பாதையில் தொழில்நுட்பம் திரும்பி இருப்பதால் இணையதள குற்றங்களை தடுப்பதற்காக மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழிகாட்டு நெறிமுறைகளை அமைப்பதற்கான கால அவகாசம் குறித்து மூன்று வாரங்களில் மத்திய அரசு பதில் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.